Monday, January 09, 2012

தமிழகத்தில் 1.40 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ சிகிச்சை!

தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 1.40 கோடி குடும்பங்கள் இலவச மருத்துவச் சிகிச்சை பெறுகின்றன.

ஆண்டுக்கு ஒரு குடும்பம், ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு மருத்துவச் சிகிச்சை பெற வரையறுக்கப்பட்டுள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சியில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இலவச காப்பீடு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. அ.தி.மு.க., பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், பொது காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

700 கோடி ரூபாய்: 

இலவச காப்பீடு திட்டத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் செலவிடுகிறது. திட்டத்தின் தலைவராக உள்ள யுனைடெட் இந்தியா நிறுவனம், காப்பீடு வசதியை அளிக்கிறது. காப்பீடு திட்டத்தில் 40 சதவீத பங்கை இந்நிறுவனம் வைத்துக்கொண்டு, இணை காப்பீடு நிறுவனங்களாக சேர்த்துக் கொள்ளும், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அசூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு தலா 20 சதவீத பங்கை அளிக்கிறது.யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் போல, இணை காப்பீடு நிறுவனங்களும், மருத்துவச் சிகிச்சைக்கான செலவை ஈடு செய்கின்றன.

ஸ்மார்ட் கார்டு: 

காப்பீடு செய்யும் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இதில், பயனாளியின் பெயர், வயது, முகவரி மற்றும் அங்க அடையாளம் இடம்பெறும். ஸ்மார்ட் கார்டுகளே, பயனாளியின் அடையாள அட்டையாக இருக்கும். இந்த கார்டுகளை மருத்துவமனையில் காண்பித்து, சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் கார்டுகள் இல்லாதவர்கள் சிகிச்சை பெற இயலாது. ஸ்மார்ட் கார்டுகளை தயார் செய்ய, கார்டு ஒன்றுக்கு, 68 ரூபாய் வரை செலவாகும் எனத் தெரிகிறது. இந்த கார்டுகளை யார் வழங்க உள்ளனர் என இதுவரை முடிவு செய்யப்படவில்லை.ஆண்டு ஒன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு, பிரீமியமாக 498 ரூபாயை தமிழக அரசு, காப்பீடு நிறுவனத்துக்கு செலுத்துகிறது. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் இதில் இலவச மருத்துவ வசதியைப் பெறுவர். ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டை தமிழக அரசு புதுப்பிக்கும்.

2,000 மருத்துவமனைகள் பதிவு: 

இலவச காப்பீடு திட்டத்தில் சிகிச்சையளிக்க இதுவரை 2,000 மருத்துவமனைகள், காப்பீடு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளன. இந்த எண்ணிக்கை, எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக உள்ளது என, அதிகாரிகள் கூறுகின்றனர். பதிவு செய்துள்ள மருத்துவமனைகளில், சிகிச்சை அளிப்பதற்காக வசதிகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய, தனிக் குழுவை காப்பீடு நிறுவனம் அமைத்துள்ளது.

மருத்துவமனைகளை நேரில் ஆய்வு செய்து, சிகிச்சை அளிப்பதற்கு தகுதியானவை என, காப்பீடு நிறுவனம் அமைத்துள்ள குழு சான்று அளிக்கும் பட்சத்தில் தான், அந்த மருத்துவமனைகள் தேர்வு செய்யப்படும். இதேபோல், சிகிச்சை அளித்ததற்குரிய செலவினத்தை, மருத்துவமனைகள் கொடுக்கும் போது, அவற்றையும் சரிபார்க்க, மருத்துவர்கள் கொண்ட குழுவை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் அமைத்து உள்ளது.

900 நோய்களுக்கு சிகிச்சை: 

இலவச காப்பீடு திட்டத்தில் 900 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை சிகிச்சை பெற்ற நோய்களை விட, இப்போது அமல்படுத்தப்பட உள்ள காப்பீடு திட்டத்தில் ஒரு மடங்கிற்கும் அதிகமான நோய்க்கு சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இலவசமாக சிகிச்சை பெற தகுதியுள்ள நோய்கள் எவை என்பதற்கான நோய்களின் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும். இதேபோல், சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் கொண்ட பட்டியலும் வினியோகிக்கப்பட உள்ளது.

அனைவருக்குமா? ஒருவருக்கு மட்டுமா?குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் என்பது, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்குமா? இல்லை ஒட்டுமொத்த குடும்பத்துக்கா? என்பது கேள்வியாக உள்ளது. குடும்பத்தில் உள்ள ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை பெற்றுவிட்டால், மற்றவர்கள் இலவச சிகிச்சை பெற இயலுமா எனத் தெரியவில்லை. கடந்த முறை இலவச காப்பீடு தனி நபருக்கு செய்யப்பட்டதால், தனி நபர் ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற வசதியிருந்தது.Source
Download As PDF

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Comments